திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் செய்யும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது: தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ், மினி வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த 15 தற்காலிக பஸ் நிலையங்களும், 24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 90 இடங்களில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இலவச பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்டளைதாரர், உபயதாரர் அனுமதி சீட்டு பெற்றவர்களில் கோயிலில் இடவசதியை பொறுத்து பரணி தீபம் தரிசனத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி கூறுகையில், `பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கார் பார்க்கிங் வசதி 48 மணி நேரத்திற்கு முன்பு இணையதளம் திறக்கப்படும். இந்த ஆண்டு 1000 கார்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ஆய்வின் போது, டிஆர்ஓ ரத்தினசாமி, ஏடிஎஸ்பி அசோக்குமார், திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஆர்டிஓ தேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த், நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழாவின் 4ம் நாளான நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் திருவீதியுலா நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக விருட்சத்தில் அண்ணாமலையாரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 5ம் நாளான இன்று காலை மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து காலை உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்தனர். இன்றிரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையரர், வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன், வெள்ளி சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
திருவண்ணாமலை கோயிலில் வரும் 10ம் தேதி நடக்கும் மகாதீபத்திருவிழாவில் பங்கேற்க 6 ஆயிரம் பேருக்கு அனுமதி